நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Wednesday, December 21, 2011

கமல் நம் காலத்து நாயகன்
கமல் நம் காலத்து நாயகன்

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப்பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத் தன்மைகொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்மோடு பேசுகிறார், கமலைப்பற்றி தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் நம்மிடம் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம்.

அணிலாடும் முன்றில் / Anilaadum munril/ Na.muthukumar/ நா.முத்துகுமார்

அணிலாடும் முன்றில் / Anilaadum munril/ Na.muthukumar/ நா.முத்துகுமார்

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமி இலக்கிய உலகிலும் திரைத்துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துகுமார்.
 கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்து வரும் இன்றைய கால கட்டத்தில் குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர்.
 கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாத்தது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு  மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
  இப்படி அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உறவு விழுதுகளை தாங்கி நிற்கும் ஒரே ஆணி வேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளில் நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவு செய்திருக்கின்றனர்.   தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப் பற்றிய முழுமையான ஆவணமாக வெளி வந்திருக்கிறது  இந்த நூல்.

Monday, December 12, 2011

இலக்கிய உலகுக்கு புது வரவாக “நீட்சி”

 
 
 
 
 
இலக்கிய உலகுக்கு புது வரவாக “நீட்சி” என்ற சிற்றிதழ் கோவையிலிருந்து வெளிவந்துள்ளது. ஆசிரியர் பாலை நிலவன். 150 பக்கங்களைக் கொண்ட, பெரிய அளவிலான மிக நேர்த்தியான வடிவமைப்புடன் வந்துள்ள நீட்சி-யின் விலை  ரூ-100 ஆகும்.  இதழ் முழுக்க அணிவகுக்கும் நவீன ஓவியங்கள் நம்மை ஈர்க்கிறது. கவிதை, கட்டுரை,  சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம்,  என தமிழின் முன்வரிசைப் படைப்பாளிகள் அனைவரும் பங்களித்துள்ளனர்.  பல புதிய படைப்பாளிகளின் அறிமுகமும் நீட்சியின் வழி கிடைக்கிறது எனலாம். 
இதழாசிரியர் பாலைநிலவன்.                           தொடர்புக்கு:                                                                                              
டிஸ்கவரி புக் பேலஸ்- 9940446650 discoverybookpalace@gmail.com

Wednesday, December 7, 2011

யுடான்ஸ் பரிசளிப்பு விழா!

அன்பார்ந்த சவால் சிறுகதைப்போட்டி வெற்றியாளர்களே,


ஏற்கனவே கோடிட்டிருந்தபடி பரிசளிப்பை ஒரு நிகழ்வாக நடத்திட யுடான்ஸ் விரும்புகிறது. இந்த மாதம் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் துவங்கும் சிறிய விழாவில் போட்டியில் வெற்றிபெற்ற கதைகளுக்கான பரிசுகள் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை வென்ற ஆறு பேர் மற்றும் ஆறுதல் பரிசு 9 இடங்களுக்கான வெற்றியாளர்கள் 8 பேர் (ஒரு வெற்றியாளர் இரண்டு ஆறுதல் பரிசுகளுக்கான இடங்களை வென்றிருக்கிறார்) ஆகிய 14 நண்பர்களையும் விழாவுக்கு அன்போடு அழைக்கிறோம்.

தாங்களே நேரில் வந்தால் மிக மகிழ்வோம். அதே நேரம் சூழல் அனுமதிக்காதவர்கள் தங்கள் சார்பாக பரிசுகளைப்பெற உறவினர், நண்பர்களை அனுப்பலாம். அதுவும் முடியாதவர்களுக்கு விழாவுக்குப் பின்னர் கூரியர் மூலமாக புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். வரவிருப்பவர்கள் தங்கள் வரவை இந்த மெயிலுக்கு பதில்மெயிலில் உறுதிசெய்யுங்கள். விழா ஏற்பாட்டுக்கு அது உதவியாக இருக்கும். மற்றவர்கள் தங்கள் கருத்துகளை/ விபரங்களைப் பதிலாகத் தாருங்கள்.

போட்டிக்குழு அறிவித்தபடி 3000 ரூபாய்க்கான பரிசுகளோடு டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் நண்பர் வேடியப்பன், நடுவர்களாக பங்கேற்ற நண்பர்கள் அனுஜன்யா, அப்துல்லா ஆகியோரும் தன்னார்வத்தில் ஒரு தொகையை பரிசுக்கென தந்து பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. மேல் விபரங்கள் எனது/பரிசல்/கேபிள் பதிவுகளில் வெளியாகும்.

தொடர்பு எண்கள் :

ஆதி - 9789066498
கேபிள் சங்கர் -9840332666

விழா நடக்கவிருக்கும் முகவரி :


டிஸ்கவரி புக் பேலஸ்,
இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை - 600078.  தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

நன்றி.

அன்புடன் -
ஆதிமூலகிருஷ்ணன் (குழுவுக்காக)

Thursday, December 1, 2011

சீனுராமசாமியின் “காற்றால் நடந்தேன்”-கவிதை தொகுப்பு குறித்து!

உயிர்மை-100
  உயிர்மையின் 100 வது இதழ் நேற்று (01/12/2011) தேவனேயப் பாவாணர் அரங்கில் நடந்தது. திட்டமிட்டபடியே அரங்கு நிறைந்த காட்சி என்பதுபோல அரங்கு நிறைந்த இலக்கியக் கூட்டமாக இருந்தது. உயிர்மையின் 100 வது இதழ் மிகவும் இலக்கிய ரசனையுடன் வெளிவந்துள்ளது. ஒரு படைப்பாளியிடம் ஒரு கேள்வி என, 100 படைப்பாளிகளிடம் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த 100 கேள்விகளும்,  அதற்கான படைப்பாளர்களின் பதிலும்  இதழை  அவசியம் பாதுகாக்க வேண்டிய இதழாக மாற்றியுள்ளது எனலாம். சில புதிய படைப்பாளர்களையும் முக்கிய படைப்பாளர்களாக இதில் அங்கீகரித்துள்ளனர்.

காற்றால் நடந்தேன்
    தொடர்ந்து  இயக்குநர் சீனுராமசாமியின்  காற்றால் நடந்தேன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா நடந்தது.  அர்த்தமுள்ள கவிதை  வரிகளை பவா செல்லதுரை, நடிகர் விவேக் போன்றவர்கள் சுட்டிக்காட்டி பேசும்போது  அரங்கில் அடிக்கடி கைத்தட்டல்களையும் காண முடிந்தது. நீண்ட நாளைக்குப் பின் கைத்தட்டல் வாங்கிய கவிதைதொகுப்பு வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருந்தது எனலாம்.
1 கோணம்

                  கரும்புக் காடு எரியுது
                  கரும்புக் காடு எரியுது

                  பதறிய மக்களின்
                  நடுவே செய்வதறியாது
                  சீனிப் புகையாக
                  கரும்பின் நறுமணம்
                  அவ்வெளியெங்கும்
                  திகைத்து நின்றது”

2. இணைபிரிவு

 கிழிந்த ரவிக்கையின்
மீதேறி இணைவை
அழுத்துகிறது
தையல் எந்திர ஊசி

சொற்கள் உடைந்து
பிளவுபட்ட தருணத்தில் 
பிரயோகிக்கப் பட்ட
நிகழ்வை மறைத்தபடி
படபடக்கின்றன
அதன் றெக்கைகள்!

3.ஒளிரும் உருவம்

                இராமேஷ்வரம் கடலைப் பார்த்து
                சதா குறைத்துக்கொண்டிருக்கிறது 
                ஒரு எல்லையோர நாய்

                ஒரு வேளை அதன்
                ஒளிரும் கண்களுக்குத்
                தெரிந்திருக்கக் கூடும்

                வசிப்பிடமின்றிக் கடலில் அலைந்து
                கொண்டிருக்கும்  உருவமற்ற
               எம் மக்களை!


இப்படி தொகுப்பு முழுக்க மெண்மையான, சிந்தனையைத் தொடும் கவிதைகள் நம்மை ஒரேமூச்சில் தொகுப்பை வாசிக்க வைக்கிறது. கவிதையைக் கண்டாலே காத தூரம் ஓடும் சூழலில் நம்மை கவிதையின் பக்கம் திரும்ப வைத்துள்ளார் கவிஞர் சீனுராமசாமி என்று துணியலாம்.  என்னைக் கேட்டால்,   நானும் கவிதை எழுதுகிறேன் என்று கவிதைத்தளத்தையே கருணையின்றி சிதைத்துக் கொண்டிருக்கும் புற்றீசல் கவிஞர்களுக்கும், பத்துமுறை படித்தபின்தான் கவிதையின் முதல் வரிக்கு ஒருவாறு அர்த்தம் புரியும்படி எழுதிவிட்டு,  மொத்த கவிதை உலகின் குத்தகை தாரர்களாக காட்டிக்கொள்ளும் அதிநவீன கவிஞர்களுக்கும் “காற்றால் நடந்தேன்” கவிதைத் தொகுப்பை  பாடமாக்கலாம் என்பேன்

 வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கம்  : 102
விலை : ரூ.80

(டிஸ்கவரி புக் பேலஸ்-ல் கிடைக்கிறது
தொடர்புக்கு= 9940446650)